‘என்னவனே!’ பகுப்புக்கான தொகுப்பு

என்னவனே!

December 1, 2006

என்னவனே..
உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?

காலை மாலையாவதும்
மாலை காலையாவதும்
உந்தன் ஆசைக்குள் மறைய
வேண்டும் வருவாயா?

எந்தன் கோட்டையை விட்டு
நீ போனாலும் நீ போட்டு விட்டு
போன கோடுகள் ஆறவில்லை
அதற்காகவேனும் வருவாயா?

கோழி கூவினாலும்
கோயில் மணி அடித்தாலும்
கோலம் போட மறந்தாலும்
உந்தன் மடியில் மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா?

கனவில் நான் குளித்து
நினைவில் காய்கிறேன்
என்னை உடுத்திக்கொள்ள
உண்ர்வோடு வருவாயா?

அங்கத்தில் இடம் பிடித்தாய்
ஆசையை தூண்டி விட்டாய்
அனுபவத்தை கொளுத்தி விட்டாய்
அணையாமல் எரிகிறேன்
அதற்காகவேனும் வருவாயா?

கோடை மழையாய்
நீ வந்தாலும் காதலா
அடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா?

இரவைக் காட்டிக்கொடுக்கும்
நிலவைப் போல எந்தன்
வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க
இரவில் வருவாயா?

ஊமையான உலகத்தில்
உன்னோடு பாட வேண்டும்
துடிக்காத நரம்பெல்லாம்
இசைக்க வேண்டும் அதைக்
கேட்டு நீ ஆடிக் களைக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா?

மறந்து விட்டாயா நம்
தனிமை பிரிந்து நான்கு
மாதமாச்சு எங்கே ஒரு
தடவை வந்து பிரிந்து விடு

நாளாக நாளாக நான் பழுக்கிறேன்
நீ சுட்ட பழம்தானேடாநான் பரிமார
வருவாயா?

இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்

என் ஏக்கத்தை களைந்து விடு
என் வெக்கத்தை பார்க்க
வேண்டும் உன்னோடு நான்
அதற்காகவேனும் வருவாயா?

வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா?

-காண்டீபன்