‘என் பிரியமானவளே!’ பகுப்புக்கான தொகுப்பு

என் பிரியமானவளே!

டிசம்பர் 1, 2006

என் பிரியமானவளே!
என் உள்ளம் குளிருகையில்
உன்னை நினைத்தால்
என் உருவம் வேர்க்கிறது.

எதற்காக உன் முகத்திரையை
என் கண்களில்
ஒட்டி விட்டுப் போனாய்?

என்னவளே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஓரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?

உன் புன்னகையையும்
உன் பார்வையையும்
எப்படி உன்னால்
ஒரே அழகில்
ஒரே நேரத்தில்
புரிய முடிகிறது.

உன்னால் மட்டுமே
என் பேனாவை
பூட்டி விட முடியும்
என்று தெரிந்தும்
ஏன் பூட்டை மட்டும்
தொலைத்தாய்?

நெஞ்சுக்குள்
ஆசைகளை வைத்துக் கொண்டு
நாக்கில் மட்டும்
எப்படி ஆண்மீகம் பேசுகிறாய்?

உன் முதல் பார்வை
என்னைச் சுட்டது
உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது

பிரியமானவளே!
என்னை மட்டும்
திருடி விடத் தீர்மானமா?

இல்லை
என்னையும் கவிஞனாக்கத் திட்டமா?
என்ன செய்யப் போகிறாய்?

என்னாலும்
என் கவிதையாலும்
சென்று விட முடியாத தேசத்துக்கு
உன்னால் சென்று விட முடியும்.

நீ என்னை மறந்து விட
காற்றில்லாத கிரகத்துக்குச் சென்றாலும்
உன் காதல் என்னைச் சுவாசித்து
அங்கும் உன் உயிரைக் காப்பாற்றும்!

காதலை மறைக்க முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது

பிரியமானவளே!
என்னை மறந்து நீ தூங்கினால்
கனவால் விழிக்க வைப்பேன்

நீ என்னை மறந்து
உன்னை மட்டும் நினைத்தால்
நீ உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தைகளிலும்
என்னை ஞாபகப்படுத்தி நினைவூட்டுவேன்.

என் பிரியமானவளே!
என்னை அழித்துவிட
உன்னால் முடியும்

என் காதலை
அழித்துவிட
யாராலும் முடியாது.

மரணத்தைப் போலவே
என் காதலும் நிலையானது!

-காண்டீபன்